நல்வரவு

வணக்கம் !

Tuesday 7 October 2014

சாதனையாளர் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!



வலையுலகில் முதன் முறையாக விமர்சனப் போட்டியை ஜனவரி 2014 துவங்கி பத்து மாதங்கள்(!!!!) சிறிது கூடத் தொய்வின்றி வெற்றிகரமாக நடத்தி வரும் (பதிவர்களால் வை.கோபு சார் என்று அன்புடன் அழைக்கப்படும்) திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்!


இப்போட்டியின் 38 வது கதையான மலரே.குறிஞ்சி மலரே! என்ற கதைக்கு விமர்சனம் எழுதியனுப்பக் கடைசி நாள்:- 09/10/2014.  இதனுடன் சேர்த்து இன்னும் மூன்று கதைகளே களத்தில் உள்ளன.  இவ்வரிய வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களது விமர்சனத்திறமையைச் சோதித்துக் கொள்ள விரும்புவோர்க்கான இணைப்பு:-


திட்டமிடல், குறித்த காலத்தில் செயல்படுதல், காரியத்தில் சோர்வின்றித் தொடர்ந்து ஈடுபடுதல், குன்றாத ஆர்வம், விடாமுயற்சி போன்ற தலை சிறந்த பண்புகளை வை.கோபு சார் அவர்களிடத்தில் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.

  
கதையை வெளியிட்ட மாத்திரத்தில் அனைவருக்கும் அது பற்றிய தகவல்களை அளித்தல், திரும்பத் திரும்ப நினைவூட்டல், விமர்சனத்தை நடுவருக்கு நகல் எடுத்து அனுப்புதல், பரிசு விபரங்களைக் குறித்த நேரத்தில் வெளியிடுதல், பரிசு தொகையைச் சுடச்சுட விநியோகித்தல் என இந்தப் பத்து மாதங்களாகத் தொடர்ந்து ஓய்வின்றி உழைத்திருக்கிறார்.  கரும்புத் தின்னக் கூலியாக தொகை+ போனஸ்+ ஹாட் டிரிக் எனப் பரிசும் கொடுத்தும் ஊக்குவிக்கிறார்.

என்னால் ஒரு சில போட்டிகளில் மட்டுமே கலந்து கொள்ள முடிந்தது.  எல்லாவற்றிலும் கலந்து கொள்ள முடியவில்லையே என வருத்தம் தான்.  ஆனால் விமர்சனம் எழுதுவது எப்படி என்று இந்தப் போட்டியின் மூலமாகவே நான் தெரிந்து கொண்டேன்.  பரிசு பெறுபவர்களின் விமர்சனங்களை வாசிப்பது மூலமாகவும், அவ்வப்போது நடுவரும் வை.கோபு சார் அவர்களும் கொடுத்த குறிப்புகள் மூலமாகவும் ஒரு சிறந்த விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

இப்போட்டியில் நடுவராயிருந்து சிறப்பான விமர்சனங்களைப் பரிசுக்குரியவையாய்த் தேர்வு செய்து கொடுத்தவர் திரு ஜீ.வி. அவர்கள்.


தமிழில் விமர்சனக் கலையை வளர்த்த சான்றோர்களில் வை.கோபு சார் அவர்களுக்கும் நிச்சயம் இடமுண்டு.  சிறந்த விமர்சன வித்தகர்களையும், சக்ரவர்த்திகளையும்  உருவாக்கியிருக்கிறார்.  வெட்டி அரட்டையைத் தவிர்த்து இணையத்தை நல்லதொரு காரியத்துக்குப் பயன்படுத்தியிருக்கிறார். 

வலைப்பூவில் எழுதும் பலர் இன்னும் அதிகளவில் பங்கெடுத்திருந்தால் இப்போட்டியை இவர் நடத்தியதன் அடிப்படை நோக்கம் முழுவதுமாக நிறைவேறியிருந்திருக்கும் என்பது மட்டுமே சிறிய குறை.


மொத்தத்தில் பத்து மாதங்கள் ஒரு போட்டியை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய சாதனையாளர்!  தொடர்ந்த ஊக்கத்துக்கும் ஆக்கத்துக்கும் ஒரு முன் மாதிரி!  எதிர்காலத்தில் இணையத்தில் இது போன்ற பயனுள்ள போட்டியைத் துவங்க  நினைக்கும் எவருக்கும், நல்லதொரு வழிகாட்டி!


நீண்ட ஆயுளும், உடல் ஆரோக்கியமும் பெற்று இவர் வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம்!