நல்வரவு

வணக்கம் !

Friday 23 October 2015

என் பார்வையில் புதுகை பதிவர் விழா - 1



நான் கலந்து கொண்ட முதல் பதிவர் விழா இதுவே.  இவ்விழா அறிவிப்பை அண்ணன் முத்துநிலவன் அவர்கள் வெளியிட்டவுடனே, இதில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கேற்பட்டது. 

பதிவர் விழா பற்றித் தினந்தினம் வெளியான புதுப்புது அறிவிப்புகள் ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தின.  புதுகை பதிவர் விழாவும் தமிழ்நாடு அரசு தமிழக இணையக் கல்விக்கழகமும் இணைந்து நடத்திய மின் இலக்கியப் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டேன்.  பெண்ணைச் சமூகம் நடத்தும் விதம் குறித்து கட்டுரை ஒன்றும் சுற்றுச்சுழல் வகைமையில் இரண்டும் எழுதியனுப்பினேன்.  குறுகிய காலத்தில் பதிவர்களிடமிருந்து மளமளவென பதிவுகள் வந்து குவிந்ததை  இவ்விழாவின் முக்கிய சாதனையாக கருதுகிறேன்.  இப்போட்டியின் பயனால் நல்ல பல ஆக்கங்கள் தமிழுக்குக் கிடைத்திருக்கின்றன.  இவை மின்னூலாகத் தொகுக்கப்படுவது கூடுதல் சிறப்பு!

இறுதியாக விமர்சனப்போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டது.  இதற்கான பரிசுத் தொகையைக் கொடுத்தவர், தம் பெயரைக் கூட வெளியிட விரும்பவில்லை. இக்காலத்திலும் இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்! 

இதன் பெயர் விமர்சனப்போட்டி என்றிருக்கக் கூடாது; பரிசு கணிப்புப் போட்டி என்றிருக்கவேண்டும்; ஏனெனில் இதில் கலந்து கொள்கிறவர்கள் விமர்சனம் ஏதும் செய்யவில்லை; முடிவைத் தான் கணித்து எழுதுகிறார்கள் என்று சிலர் எழுதியது சரி என்பது தான் என் கருத்தும்.  எல்லாரையும் எல்லாப்பதிவுகளையும் வாசிக்க ஊக்குவிக்க வேண்டும் என்பது தான் இப்போட்டியின் முக்கிய நோக்கம்.  ஆனால் இதில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை, எதிர்பார்த்த அளவு இல்லை. 

என் கட்டுரைகளுக்குப் பரிசு கிடைக்காவிட்டாலும், இப்போட்டியில் எனக்கு இரண்டாமிடம் கிடைத்தது.  என்னைப் பொறுத்தவரை இது எளிதாக  இல்லை.  அத்தனை பதிவுகளையும் ஒன்று விடாமல் வாசித்து ஒவ்வொன்றிலும் மூன்றை மட்டும் வடிகட்டித் தேர்ந்தெடுப்பது, மிகவும் சிரமமாக இருந்தது.  இப்போட்டியில் கலந்து கொண்டதற்கும், நடுநிலைமையிலிருந்து பதிவுகளின் சாதக பாதகங்களை அலசுவதற்கும் திரு வை.கோபு சார் நடத்திய விமர்சனப்போட்டி பயிற்சிப்பட்டறை மூலம் கிடைத்த அனுபவம் மிகவும் உதவியது என்பதை மறுப்பதற்கில்லை.  மேலும் பல புதிய எழுத்தாளுமைகளை அறிந்து கொள்ள இப்போட்டி எனக்கு உதவியது. 

இப்போட்டியில் யாருமே வெற்றி பெற முடியாது; இதில் இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு எப்படிக் கொடுக்கலாம்? இதற்குப் பின்பற்றப்பட்ட வழிமுறைகள் என்னென்ன என்றெல்லாம் கேட்டுச் சிலர் வியாக்கியானம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மாதத்துக்கு மேல் ஊண் உறக்கமின்றி உழைத்துப் பதிவர் விழா நடத்தியதோடல்லாமல், இவர்கள் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய தலைவலி விழாக்குழுவினர்க்கு!   இதே நிலைமை நீடித்தால் எதிர்காலத்தில் விழா நடத்துபவர்கள், இது போல போட்டிகளை நடத்தவே யோசிப்பார்கள்!  அவ்வளவு ஏன்?  பதிவர் விழா நடத்தவே யாரும் முன்வருவார்களா என்பது சந்தேகம் தான்.


இவ்விழாவின் அடுத்த முக்கிய சாதனையாக நான் கருதுவது உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு.  முதல்முறையாக 331 பதிவர்களின் வலைப்பூ முகவரிகளைக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.  இதற்காக வலைப்பூ குறிப்புகளை அனுப்பச் சொல்லி பலமுறை வேண்டுகோள் விடுத்தார்கள்; தேதி நீட்டிப்புச் செய்தார்கள். 

பின்னர் மிகக்குறுகிய காலத்தில் இது வடிவமைக்கப்பட்டு அழகான அட்டைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.  சிலர் நான்கு பக்க அளவில் குறிப்பெழுதியனுப்ப, வேறு சிலரோ ஒரு வரி கூட எழுதாமல் வலைப்பூ பெயரை மட்டும் அனுப்பினார்களாம்.  எனவே விபரங்களை ஒரே மாதிரியாகத் தொகுக்க வேண்டிய கட்டாயத்தின் காரணமாகச் சிலர் தந்த குறிப்புகளை மிகவும் சுருக்கி வெளியிட நேர்ந்தமைக்காக விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணன் முத்துநிலவன் அவர்கள் முன்னுரையில் வருத்தம் வேறு வெளியிட்டிருக்கிறார். அப்படியிருந்தும் பதிவர் பெயரை வரிசையில் கொடுத்திருக்கலாம்; இப்படிச் செய்திருக்கலாம்; அப்படி வெளியிட்டிருக்கலாம் என்று குறைகள் சொல்லப்படுகின்றன. 

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
என்ற குறள் தான் எனக்கு நினைவுக்கு வருகின்றது.

பதிவர் விபரங்களைத் தொகுக்கும் முதல் முயற்சி இது; இதில் சில குறைகள் இருக்கலாம்.  அடுத்தடுத்துக் தொகுக்கப்பெறும் கையேட்டுக்கு இது முன்னோடி என்ற வகையில், இது மாபெரும் சாதனை என்பதில் சந்தேகமில்லை.    

நான் சந்தித்த பதிவர்கள் பற்றி அடுத்த பதிவில்,

நன்றியுடன்
ஞா.கலையரசி
(படம் நன்றி இணையம்)


Thursday 1 October 2015

வேருக்கு நீரூற்ற வாங்க வாங்க!




வேருக்கு நீருற்றும் திருவிழாவுக்கு வாங்க வாங்க! தங்கள் வரவு நல்வரவாகுக! 

தமிழனின் அடையாளம் தமிழ்! 

ஆங்கில மோகம் கொண்டு தமிங்கிலீஷ் என்ற பெயரில் அச்சு ஊடகங்களிலும், பேச்சு வழக்கிலும் நம் வேரை  பெரும்பான்மையான மக்கள் சின்னாபின்னமாக சிதைத்தழித்துக் கொண்டிருக்க, நமக்கு அடையாளம் தந்த மொழியையும், அதன் தொன்மையான சிறப்புக்களையும் அடுத்த தலைமுறைக்குப் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் என்ற தணியாத ஆர்வத்துடனும், அக்கறையுடனும் இணையத்தில் இணைந்து செயல்படும்  தமிழ்ப்பதிவர்களாகிய நாமனைவரும் அண்ணன் நா.முத்துநிலவன் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைந்து, புதுகையில் ஒன்று கூடும் திருவிழா!

வரலாறு காணாத இத்தமிழ்த் திருவிழாவுக்குத் தங்களை விழாக்குழுவினர் சார்பாக வருக வருக என வரவேற்பதில் மகிழ்கின்றேன்! 

என்ன திகைக்கிறீர்கள்?  புதுவை மாநிலத்தைச் சேர்ந்தவள் எப்போது புதுகை மாவட்டத்து விழாக்குழுவில் சேர்ந்தாள் என்று தானே?  இது நம் குடும்பத் திருவிழா அல்லவா?  இதில் புதுவை, புதுகை எல்லாம் ஒன்று தானே?

இவ்விழாவுக்குத் தற்கால எழுத்தாளர்களில் மிக முக்கிய ஆளுமையான எஸ்.ரா கலந்து கொள்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. 

இன்னும் யார் யாரெல்லாம் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள….




 புதுகையில் சந்திப்போம் சகோதர சகோதரிகளே!